Monday 10 April 2017

தாவரத்தின் குரல் -- நன்மை தரும் கருவேலமரம் (பாகம்-3)



Image result for nattu karuvelam tree images



"என்னை அறிவீரா?? -- நன்மை தரும் கருவேலமரம்

நேற்று கருவேல மரம் மற்றும் வெள்வேல மரம் பற்றி பார்த்தோம்.

பயன்பாடுகள்:-

🌵நமது கருவேல மரம் உயர்ந்து வளரும். இம்மரங்கள் வைரம் பாய்ந்த மரங்கள். மிக உறுதியான தன்மை கொண்டவை.

 🌵எனவேதான் வேளாண்மைக்கு தேவையான ஏர்கலப்பை, அரிவாள் மற்றும் கோடாரிக்குத் தேவையான காம்புகள், கைப்பிடிகள் செய்யவும், மாட்டு வண்டிகள், வீட்டிற்கு தேவையான வாசல், சன்னல், பலகை, சட்டங்கள் போன்ற பல்வேறு மரப்பொருள் செய்வதற்கு இம்மரங்கள் பயன்பட்டு வருகிறது.

🌵நாட்டு கருவேல மரத்தால் உறுதியானவையாக இருப்பதால் உளுத்து போய் விடுவதில்லை.

🌵இதன் இலைகளையும், நெற்றுகளையும் வெள்ளாடுகள் விரும்பி உண்ணும்.

🌵இதன் உலர்ந்த நெற்றுகளை ஆட்டினால் அவற்றிலுள்ள விதைகள் கலகல என ஒலிக்கும். சிறுமியர் இதன் நெற்றுகளைக் கட்டிச் சலங்கை போல் கால்களில் கட்டிக்கொண்டு நடந்து மகிழ்வர்.

🌵இந்த மரத்தில் ஒழுகும் பிசின் ()கோந்து (gum) எழுதுதாள்களை (paper) வன்மையாக ஒட்ட உதவும்.

🌵கருவக்காய்களைக் கொஞ்சம் நீர் ஊற்றி இடித்து வடித்துத் தேங்காய் உடைத்த கொட்டாங்குச்சிகளில் ஊறவைப்பர். ஊறிய நீரை வெய்யிலில் காயவைப்பர். அதன் சாறு கெட்டியானதும் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டுக்குப் பயன்படுத்துவர்.

🌵நன்றாக உலர்ந்து கெட்டியான இதன் பாலில் சொட்டு நீர் ஊற்றிக் குழைந்தும் பொட்டாகப் பயன்படுத்துவர். இந்தப் பொட்டு நிழலாடும். அதாவது அந்தப் பொட்டுக்குள் அடுத்தவர் தன் முகத்தைப் பார்க்கலாம்.

🌵இதைப் போலத் தமிழர் பயன்படுத்திய மற்றொரு பொட்டு வேங்கைப்பொட்டு. இது செங்கரு நிறம் கொண்டது. கருவம் பொட்டு கருகரு நிறம் கொண்டது.

🌵நாட்டு கருவேல மரத்தின் பிஞ்சு குச்சிகள், பல்துலக்க பயன்படுத்தப்ட்டுகளாக கட்டி அன்றாடம் சந்தையில் விற்கப்படுகிறது. இன்று சிறு நடுத்தர ஊர்களில் கருவேல மரம் பல்குச்சி சிறு சிறுகது பற்பசை, பல்துலக்கி என எண்ணற்றவை திணிக்கப் பட்டாலும் கூட கருவேல மர பல்குச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை.

🌵எனவேதான் "ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி" என்ற பழமொழி உள்ளது. கருவேலம்பட்டை பற்பொடி என்பது எங்கள் பகுதியில் ஒரு காலத்தில் மிகச்சிறப்பாக விற்பனையான பற்பொடியாகும். அந்தப் பற்பொடியின் துவர்ப்பு சுவை இப்போதும் எனது நாவில் உள்ளது.

நாளை மருத்துவ பயன்களை பற்றி பார்ப்போம்.

எழுத்து
#.முகேஷ்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment